Thursday, October 3, 2013

திருவண்ணாமலை




திருவண்ணாமலையின் வயது 

உலகில் பல்வேறு தலங்களில் மலைமேல் இறைவன் அருள்புரிகிறார். ஆனால், திருவண்ணாமலையில் மலையே இறைவனாக இருக்கிறது. கயிலாயமலை இறைவனின் இருப்பிடமாக இருந்தாலும், இறைவனே சுயம்பு வடிவாய் மலையாய் காட்சியளிப்பது திருவண்ணாமலையே. இந்த மலை 2,748 அடி உயரம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 168 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் தென்மேற்கு திசையில் உள்ள அல்லிசுனை அருகில் அல்லிகுகை உள்ளது. கிரிவலப்பாதை 14 கி.மீ., தூரம் கொண்டது. அண்ணாமலையார் கோயில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி அதாவது 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பழங்கால வரலாறு மற்றும் புவியியல் அமைப்பின்படி பார்த்தால், திருவண்ணாமலையின் வயது 260 கோடி ஆண்டுகளாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது.

கிரிவலம் செல்வது எப்படி?

திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையின் துவக்கத்தில் இந்திர லிங்க கோயில் உள்ளது, இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம்செய்துவிட்டு வலம் வர துவங்க வேண்டும். சுற்றுப்பாதையிலுள்ள அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், நேர் அண்ணாமலை, வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் வழியாக, சுடுகாட்டிலுள்ள ஈசான்ய லிங்க கோயிலுக்குச் செல்ல வேண்டும். மனிதா! நீ யாரை வேண்டினாலும், என்ன சம்பாதித்தாலும் இறுதியில் வருமிடம் இதுவே, என்பதை <கிரிவலத்தின் இறுதியில் நாம் உணர்கிறோம். இதனால் ஆசைகள் அகல்கின்றன. ஆணவம் நீங்குகிறது. அகங்காரம் அழிகிறது. கடைசியாக அண்ணாமலையார் கோயிலுக்குள் நுழைந்து, அருணாசலேஸ்வரரையும், உண்ணாமுலையம்மனையும், இதர தெய்வங்களையும் வணங்கி விட்டு கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சொக்கப்பனை: தென்மாவட்ட கிராமங்களில் திருக்கார்த்திகையன்று சூந்து என்னும் ஒருவகை வெள்ளை நிற குச்சியைக் கட்டுகளாகக் கட்டி எரிப்பர். குழந்தைகளுக்கு சூந்து மிகவும் பிடிக்கும். இப்போது சூந்துக் குச்சி கிடைப்பதில்லை என்பதால், பனை, தென்னை ஓலைகளைக் கட்டாகக் கட்டி எரிக்கின்றனர். இறைவனை ஒளிவடிவில் பார்ப்பதே இதன் நோக்கம். பல கோயில்களில் கார்த்திகையன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. பனை மரத்தை நட்டு அதைச்சுற்றிலும் ஓலை கட்டுவர். சிவபார்வதியை சப்பரத்தில் அமர வைத்து அந்த இடத்திற்கு கொண்டு வருவர். பூஜாரி சுவாமிக்கு தீபாராதனை காட்டி, அந்த கற்பூர நெருப்பை ஓலையில் பற்ற வைப்பார். தீ கொளுந்து விட்டு எரியும். மக்களும் தங்கள் கையில் கொண்டு வந்த ஓலைகளை அந்த நெருப்பில் போடுவர். இறைவனை ஒளிவடிவாகக் கண்டு தரிசித்து மகிழ்வர்.

திருவண்ணாமலை கோபுரங்கள்: திருவண்ணாமலை கோபுரம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய @காபுரம் ஆகும். திருவண்ணாமலை ராஜகோபுரம் 11 நிலைகளைக் கொண்டது. 216 அடி உயரமும், 98 அடி அகலமும் கொண்டது. திருமஞ்சன கோபுரம் 157 அடி உயரமும், மேற்கு கோபுரம் 144 அடி உயரமும் அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி உயரமும் கொண்டவை.

அருணகிரியார் அவதாரத் தலம்: முருகபக்தரும், வாய்மணக்க திருப்புகழ் பாடியவருமான அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். பெண்ணாசையால் கெட்ட அவர், இங்குள்ள கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகப்பெருமானே அவரைத் தாங்கிப் பிடித்தார். தன்னைப் பாடுமாறு முத்தைத்தரு பத்தித்திருநகை என்று அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரியார் அதை முதலடியாகக் கொண்டு திருப்புகழைப் பாடினார். பின், தமிழகத்திலுள்ள ஏராளமான கோயில்களுக்கு சென்று, அங்குள்ள முருகனைப் பற்றிப் பாடினார்.

திருவெம்பாவை ஒலித்த ஊர்: மதுரை திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது.

கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி?

சிவன் மீது தீவிர பக்திகொண்ட பக்தர் ஒருவர் கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அறுத்து, அதை விற்றுக் கிடைத்த பணத்தில் திருவிளக்கேற்றி வந்தார். புல் விற்பனையாகாத சமயங்களில், அந்தப் புல்லையே திரிபோல் திரித்து விளக்கேற்றினார். ஜாமகால பூஜை வரை கோயில்களில் விளக்கு எரிய வேண்டும். ஆனால், ஒரு சமயம் கணம்புல் சீக்கிரம் அணைய இருந்தது. இதனால் தன்னுடைய தலைமுடியையே திரியாக்கி விளக்காக எரிக்க முயன்றார். தன் பக்தனை மேலும் சோதிக்க விரும்பாத சிவபெருமான், அவருக்கு காட்சியளித்து கைலாய பதவி வழங்கினார். அந்தப் பக்தருக்கு கணம்புல்லர் என்ற பெயர் ஏற்பட்டது. நாயன்மார்கள் வரிசையில் அவர் இடம் பெற்றுள்ளார். கோயில்களில் தீபமேற்றுவதற்கு எக்காலத்திலும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்காக, ஒரு விழாவே உருவாக்கப்பட்டது. கார்த்திகை நட்சத்திரம் அக்னிக்குரியது. சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து உருவாக்கிய முருகப்பெருமானை கார்த்திகைப் பெண்கள் எனப்படும் ஆறுபேரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அவர்களால் மட்டுமே அக்னி பிழம்பான அந்தக் குழந்தையை வளர்க்க முடிந்தது. இந்த அடிப்படையில், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபமேற்றும் பழக்கம் ஏற்பட்டது.

பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம்.

ஞாயிறு - மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள் - செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய் - வறுமை, கடன் நீங்குதல்
புதன் - கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன் - தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி - விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி - கிரக தோஷங்கள் நீங்கி துன்பம் நீங்குதல்
அமாவாசை நாட்கள் - மன நிம்மதி கிடைத்தல்
தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக சுற்றுதல் - குறையிருந்தாலும் மகப்பேறு கிடைத்தல்

திருவண்ணாமலைல் 360 தீர்த்தங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மூர்த்தங்களாலும் (தெய்வ விக்ரஹங்கள்) தீர்த்தங்களாலும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக கோயிலிலுள்ள கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே புண்ணியம் மிகுந்த சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இதிலுள்ள தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு அண்ணாமலையாரையும், உண்ணாமலையம்மையையும் தரிசித்து வழிபட வேண்டும். காலபைரவர் சன்னதிக்கு எதிரில் பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மலையில் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும். அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும் பாறைச் சுனை, ஊத்துக் குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை கழுதைச் குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச் சுனை, தனக்க மரத்துச்சுனை, புங்க மரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை, ஆள் இறங்கிக் குளித்திடும் அளவுக்கான தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனை (ஒறட்டு என்றால் இடது என்று பொருள்), தவழ்ந்து உள்ளே சென்று நீர் குடிக்கும் புகுந்து குடிச்சான் சுனை ஆகிய குட்டித்தீர்த்தங்களும் உள்ளன. அடிஅண்ணாமலை அருகில் பொங்குமடு தீர்த்தம், துர்க்கை அம்மன் கோயில் அருகிலுள்ள கட்க தீர்த்தம், ரமணாஸ்ரமத்துக்கு அருகிலுள்ள சிம்ம தீர்த்தம் உட்பட 360 தீர்த்தங்கள் மலைவலம் வரும் பகுதியில் உள்ளன.

பஞ்ச பருவ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் இருந்தே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மூன்றாம் குலோத்துங்க மன்னரின் காலத்தில் இவ்விரண்டு திருவிழாவுடன், தை மாதத்தில் திருவூடல் விழாவும் நடந்துள்ளது. சித்திரையில் 10 நாள் திருவிழா நடைபெறும். ஆவணியில் மூல நாளில் மூலத்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாக்களை பஞ்ச பருவ விழாக்கள் என்று கூறுகின்றனர்.

அரோஹரா - விளக்கம்

ஒருவர் இன்னொருவருக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்து அது திரும்பி வரவில்லை என்றால் உன் பணம் அரோஹரா தான் என்று விளையாட்டாக சொல்வது வழக்கம். அரோஹரா என்ற சொல்லுக்கு போய்விட்டது என்று பொருள். ஹர ஓ ஹர என்ற சொல் தமிழில் அரோகரா என திரிந்தது. சிவ நாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹர என்றால் பாவங்கள் போய்விட்டது என்று பொருள் கொள்ள வேண்டும். இதை இடைவிடாது உச்சரித்தால் நம் பாவங்கள் யாவும் ஒழிந்து விடும். அதனால் தான் அண்ணாமலையில் அரோஹரா என்ற சொல் வேத மந்திரமாக ஒலிக்கிறது.

எட்டு திசை காவல் தெய்வங்கள்

திருவண்ணாமலையை கிரிவலம் வரும் போது நாம் எட்டு லிங்கங்களை வழிபடலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கும் காவல் தெய்வங்களாகவும், அதிபதியாகவும், நாயகர்களாகவும் திகழ்கின்றனர். இந்திரலிங்கம் கிழக்கு திசை காவல் தெய்வம், அக்கினி லிங்கம் தென்கிழக்கு திசைக்கு அதிபதி, எமலிங்கம் தென்திசைக்கு அதிபதி, நிருதிலிங்கம் தென்மேற்குத் திசைக் காவல் தெய்வம், வருணலிங்கம் மேற்கு திசைக்கு அதிபதி, வாயு லிங்கம் வடமேற்கு திசைக்கான காவல் தெய்வம், குபேரலிங்கம் வடக்குத்திசை நாயகன், ஈசான்ய லிங்கம் வடகிழக்கு திசைகளின் தெய்வமாகும்.

கார்த்திகைக்கு முக்கியத்துவம் ஏன்?

தந்தை, மகன்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் விழாவாக, திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. முருகன் வளர்த்த ஆறு முனிபத்தினிகளை சிவபெருமான் ஒரே நட்சத்திரமாக மாற்றினார். அந்த நட்சத்திரத்துக்கு பரிபூரண ஒளி கொடுத்து கார்த்திகை என பெயர் சூட்டினார். எனவே தான் முருகனுக்கு உகந்த நாட்களில் கார்த்திகை பிரதான இடம் பிடித்துள்ளது. இதனால் தான் கார்த்திகை நட்சத்திரத்தில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர். அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயரே இருக்கிறது. இதே நாளில் தான் சிவனுக்கு உரிய மகா தீபத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. அதாவது தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா வருகிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிறர் குழந்தைகள் மீதும் உயிரையே வைத்திருப்பர் என்றும், தைரியசாலிகளாக இருப்பர் என்றும், நியாயம் காக்க உயிரையும் கொடுப்பர் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாக ஆண்டுப்பிறப்பைக் கணக்கிட்ட பழக்கமும் வழக்கத்திலிருந்ததாக பழந்தமிழ் நூல்களின் ஆய்வுக்குறிப்பில் உள்ளது. ரிக் வேதத்திலும் நட்சத்திரங்களை கணக்கிடும் போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு எண்ணப்படுகிறது. சிவனுக்கும், முருகனுக்கும் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்பிருப்பதால் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.

கார்த்திகை விளக்கில் ஊற்றும் எண்ணெய்

திருக்கார்த்திகை தினத்தன்று கிளியஞ்சட்டியில் (களிமண்ணால் சிறிய அளவில் செய்யப்படும் விளக்கு) பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத்திரி போட்டு அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக நம்பிக்கையுள்ளது. ஆகவே தீபத்தில் பசு நெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

புயலை அடக்கும் தீபம்

திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையில் புயல் போல துன்பங்கள் வந்தாலும், தீபதரிசனம் செய்தால் அவை எளிதில் நீங்கிவிடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துவதாக கூறப்படுகிறது.

விளக்கு தானம்

திருவண்ணாமலையில் வசிப்பவர்கள் கார்த்திகை திருநாள் அன்று தங்கள் வீடுகளிலுள்ள விளக்குகளை கிரிவலம் செல்லும் பாதையில் வைத்து ஏற்றுகின்றனர். இதன் மூலம் மலையில் ஏற்றப்பட்ட மகாதீபத்தின் ஜோதி தங்கள் வீடுகளிலுள்ள விளக்குகளிலும் படிவதாக நம்பிக்கை. பின்னர் தங்கள் வீடுகளுக்கு எடுத்து வந்து விளக்குகளை ஏற்றுகின்றனர். இதனால் வாழ்க்கையில் புதிய ஒளி பிறப்பதாக நம்பப்படுகிறது. சிலர் இந்த விளக்குகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தானமாகவும் வழங்குகின்றனர்.

நாம் யார் தெரியுமா?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பஞ்ச பூததலங்களில் அக்னிரூபனாகவும் சுயம்புலிங்கமாகவும் (தானாகவே தோன்றியது) அருள்புரிகிறார்.சுயம்புலிங்க வடிவில் அருணாசலேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் ஆசை அழிந்து நாம் யார், எதற்காக இங்கு வந்தோம். எங்கு செல்ல வேண்டும், வாழ்வின் இறுதிநிலை என்ன என்னும் உண்மைகளை உணரமுடியும்.

தீபத் திருநாளில்..!

தீபத் திருநாளன்று மலையடிவாரத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுவது-பரணி தீபம், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம். மகாதீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மகாதீபத்துக்கான வெண்கலக் கொப்பரை, கி.பி. 1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிடை பெற்றவர்கள் பர்வத ராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவர். ஆலயத்தின் தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் மகாதீபம் ஏற்றப்படும்.

No comments:

Post a Comment