Tuesday, April 5, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 4

வீர சைவம்  

இது தன்னுடைய தோற்றத்தை மிகப் பழங்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. ஆயினும் இது மிகவும் புகழ் பெற்றது. கி.பி.12   ஆம்  நூற்றாண்டில்தான். இதற்கு காரணமாக இருந்தவர் அப்போது கன்னட நாட்டில் வாழ்ந்த பசவா என்பவரே. இவரே இதனை நிறுவினார் என்னும் கருத்துக்கள் உள்ளது. ஆனால் இவரது வரலாற்றைக் கூறும் பசவபுரானத்தில் இவருக்கு முன்னரே விஷ்வேச்வரராத்ய, பண்டிதாராத்ய,  ஏகோராம  போன்றவர்கள் இருந்து சிவசக்தியை நிலை நாடியுள்ளதாகச் சான்றுகள் உள்ளன.

             பசவர் பிஜ்ஜ்ள (கி.பி.1157 - 1167 ) என்னும் அரசனிடம் அமைச்சராய் இருந்தவர். இவருடைய சகோதரியை அரசன் மணந்து கொண்டான். இவர் அரசச் செல்வத்துக்கு அதிகாரியாய் இருந்தபோது, வீர சைவ நெறியைப் பின்பற்றியவர்களுக்கு செல்வதை வாரி இறைத்தனர். இதை அறிந்த அரசன் இவர்மீது வெறுப்புக் கொண்டு இவரைத் தொலைத்திடத் திட்டமிட்டான். பசவர் அங்கிருந்தும் வெளியேறி விடவே அவரிப் பிடித்துவரப் பலரையும் ஏவினான். அவர் அவர்களை வென்று விரட்டி அடித்தார். ஆனால் அரசன் படை ஒன்றினை அனுப்பினான். பசவர் பலரையும் திரட்டித் தம்மை எதிர்கொண்ட படையினரை வென்றார். பின்னர் இருவருக்கும் ஒருவாறு உடன்படிக்கை ஏற்பட்டது. ஆயினும் உட்பகை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் அரசன் கொல்லப்பட்டான். அதில் பசவருக்கும் பங்குண்டு என்பர். இந்த வரலாற்றிலிருந்து பசவர் கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்தார் என்பதும், வீரசைவர்களுக்கு நிதி உதவி செய்து ஆதரித்தார் என்பதும் புலனாகின்றன. ஆகவே, வீர சைவம் கன்னட நாட்டில் பரவுவதற்குப் பசவர் தூண்டுகோலாய் இருந்தார் என்பதும் உண்மை. இவருக்குப் பின்னரே இது ஆந்திரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பரவியது.

அடிப்படை நூல்கள் 

             இதற்கு வேதங்கள், சைவ ஆகமங்கள், புராணங்கள், ஆகியவற்றுடன் புராதனர்கள் எனக் கருதப்படும் தமிழ் நாயன்மார்கள் பாடிய பாடல்களும், கன்னட அநுபூதிமான்கள் மொழிந்த அருளுரைகளும் (வதனங்கள் ) அடிப்படையான பிரமாண நூல்களாகும். இது லிங்காயதம் என்றும் வழங்கப்படுகிறது. காரணம் இதனைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தமது உடலில் லிங்க உருவை அணிந்து கொண்டிருப்பதுதான். இதற்குச் சக்தி விசிஷ்டாத்வைதம் என்னும் பெயருண்டு. கடவுளின் அத்வைத நிலை அவருடைய 'சக்தி'யினால் 'விசேஷிக்'கப்படுவதால் இப்பெயர். இச்சமயத்தின்படி, கடவுளும் ஆன்மாவும் இந்தச் சக்தியின் மாற்றமுடியாத ஆற்றலினால் பிரிக்க முடியாதவாறு பினைப்புண்டிருக்கின்றனர். கடவுள் என்னும் முழுமையின் சிறிய பகுதிதான் தனித்த ஆன்மா, கடவுள் ஆன்மா என்றால் உடல் தான் தனித்த ஆன்மா.


உலகப் படைப்பு 

           பரமசிவம் எனப்படும் கடவுளே இவ்வுலகத்தின் இறுதி நிலைக் காரணர். ஆயினும் இவ்வுலகப் படைப் பாக்கத்தில் அவர் எந்த மாற்றத்தையோ, குறையையோ அடைவதில்லை. இதற்குக் காரணம் இந்த உலகபடைப்பானது அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சிறப்பு பகுதியான(கூறுஆன) மஹா சக்தியினாலேயே நடைபெறுவதுதான். சக்தி, மூலப் பிரகிருதி அல்லது மாயை என்பதுதான் பிரபஞ்சமாக உருப்பெறுகிறது. இந்த மாயை என்பது இயற்கையாகவே முழுமுதற்பொருளான பிரம்மத்துக்கு உரியதாயும், அதனுள்ளேயே வாழ்வதாயும் இருப்பது. அதாவது சிவத்துக்கு உரியதாயும் சிவத்துள்ளே வாழ்வதாயும் உள்ளது. உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தை கடலில் போட்டுவிட்டு பார்க்கும் பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் நீர் கடல் நீரில் இருந்து பிரிந்து தனித்திருப்பது போல் தோன்றும் ஆனால் உண்மையில் அந்த நீர் கடலுக்கு உரியாதாயும் கடலுக்குள்ளேயே இருப்பதுவுமே உண்மை.

அடுத்து நாம் பார்க்க விருப்பது கடவுட் கொள்கை