சைவத்தின் சரிதம்
நன்றி
பூ.ஜெயராமன் மற்றும் அனுராகம்.
நன்றி
பூ.ஜெயராமன் மற்றும் அனுராகம்.
1 . வரலாற்றுப் பின்னணி
இந்திய நாட்டில் வழங்கி வரும் மிகப் பழமை வாய்ந்த வழிபாடுகளுள் சிவ வழிபாடும் ஒன்று. இவ்வழிபாடே சைவம் என மலர்ச்சியுற்றது. சிவனை முதல்வனாகக் கொண்டு வழிபடும் சமயங்கள் பல உள்ளன. தமிழ்ச் சைவசித்தாந்த நூல்களில் பாசுபதம், மகாவிரதம், காபாலம், வாமம், பைரவம், ஐக்கியவாதம் என ஆறு அகப்புறச் சமயங்களையும் பாஷானவாதம், பேதவாதம், ஈசுவர அலிகார வாதம் சிவசமவாதம், சிவசங்கிராந்த வாதம், சிவாத்துவிதவாதம் என ஆறு அகச்சமயங்களையும் குறிப்பிடுவர். இன்னும் சங்கர மடத்தினர் அத்வைதத்தின் பெயரால் சைவ சமயத்தையே பின்பற்றுவதையும் காணலாம்.
இந்தியாவில் பெரு வழக்கிலுள்ள இச்சமயம் இந்நாட்டின் பெரும்பான்மைச் சமயம் (Majority religion ) என்றால் அது மிகையாகாது.
சிவ வழிபாடு ருக் வேதத்தில் இருந்தே தொடங்குகிறது. அதில் சிவன் என்னும் பெயர் கையாளப்படவில்லை. அவன் ருத்திரனாய்க் காட்சி அளிக்கிறான். ருத்திரன் விண்ணையும் மண்ணையும் ஊடுருவிச் செல்லும் அம்புகள் உடையவனாகவும் (VII 46 .3 ) பசுக்களையும் மக்களையும் கொல்லும் ஆயுதங்களைத் தாங்கியவனாகவும் ( I , 114 , 10 ) இடியினால் உயிர்ச்சேதங்கள் இழைப்பவனாகவும் (II , 33 .14 ) விளங்குகின்றான். அவன் நோய்களைச் செர்ப்பவனாகவும் தீர்ப்பவனாகவும் தீர்பதற்குரிய மருந்துகள் உடையவனாகவும் (I 43 .4 ) மருத்துவர்களுக்கும் மிகச்சிறந்த மருத்துவனாகவும் ( II 33 .4 ) ஆயிரம் மருந்துகளை உடையவனாகவும் ( VII 46 .3 )சித்திரிக்கப்படுகின்றான். அதனால் மக்கள் தங்களை அழிவினின்றும் காத்திடுமாறு அவனை வேண்டுகின்றனர். 'ருத்ரனே சினத்தினால் எங்கள் பிள்ளைகள், சந்ததியினர், மக்கள் மாடுமனைகள் ஆகியவர்களுக்கு ஊறு விளைவிக்காதே! எங்கள் மக்களையும் கொல்லாதே! நாங்கள் என்றும் உனக்குக் காணிக்கை செலுத்தித் தொழுகிறோம்' (1 .114 .8 ) என்று வழிபடுகின்றனர்.
இவ்வாறு பயத்தினாலும் அச்சத்தினாலும் பீடிக்கப்பட்டபோது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ருத்ரனை நினைத்தான். வேண்டினான், வணங்கினான மனிதன். இவை பின்னால் ருத்திரன் எங்கும் நிறைந்த பரம்பொருளாக மாறுவதற்கான காரணங்களாயின. மக்களின் வாழ்க்கையில் அச்சத்தினால் அவதிப்படும் நிகழ்ச்சிகள் ஏற்ப்படுவதுண்டு. தோற்று நோய்களும் மற்ற நோய்களும் வரும்போது அஞ்சுகிறான். இடி மின்னலினால் தாக்குறும் போது நடுங்குகிறான். புயல் மழையினால் தாக்குறும் போது பதறுகிறான். இவற்றை அளிக்கும் கடவுளை அடிக்கடி நினைக்கிறான். ஆகவே காக்க வருமாறு மற்ற கடவுல்களினும் மேலாக இக்கடவுலையே அடிக்கடி வேண்டுகிறான்.
இப்படிக் கடவுள் நிலைக்கு உயர்ந்தவனே ருத்ரன். மனிதனின் அடிமனதில் குடிகொண்டிருந்த அச்ச உணர்வு என்னதான் மறைக்க முயன்றாலும் முடியாமல் மேலெழுந்து உருத்துவதன் விளைவாக உருவானவனே உருத்திரன் என்னும் ருத்திரன். அவனே பின்னர் மங்கலமயமாக்கப்பட்டுச் சிவமயமாகின்றான் என்கின்றனர் ஆய்வாளர்.
யஜுர் வேதத்தின் பகுதியான சடருத்த்ரியத்தில்தான் ருத்ரன் சிவனாகக் காட்சி அளிக்கிறான். 'மங்கல வடிவினனும், அடைந்தாரையும் சிவமாக்கும் மங்கலம் மிக்க வடிவினனும் ஆகிய நினக்கு வணக்கம்!' என்று அதில் வருகிறது. ருத்ரன் அச்சந்தரத் தக்கவனாய் இருந்தும் மங்கலம் சேர்க்கும் சிவனாக மாறும் பொருட்டு வணங்கப்பருகிறான். பின்னர் சிவன் என்னும் பெயர் வேதங்களின் பிற்பகுதிகளில் சிறப்புப் பெரும் பெயரானது.
இறுதியில், ச்வேதாச்வதர உபநிஷத்தில் இச்சிவன் பிரமம் என்னும் நிலைக்கு உயர்ந்து முழுமுதற் கடவுளாகிறான். 'வேதங்களை வெளிப்படுத்தி அனைத்து உயிர்களையும் வாழ்விக்கும் ருத்ரனே! அச்சத்தையும் பாவத்தையும் போக்கும் மங்கலமான திருமேனியால் ( சிவதானு) எங்களை இன்புறச் செய்வாயாக! (III 5 ) என்று வேண்டப்படும் ருத்ரன், 'உலகம் யாவையும் தமது சொந்த ஆற்றலால் காத்து ஆள்பவன் ருத்ரன். அவனை இரண்டாமவன் ஆக்ககூடியவர் வேறு எவரும் இல்லை. அதாவது சிவனுக்கு மேல் ஒருவர் வந்து அவரை இரண்டாவது இடத்திற்கு தள்ளக்கூடியவர் இது வரை யாரும் இல்லை. அவன் ஒவ்வோர் உயிருள்ளும் நிலைத்திருக்கிறான். உலகங்கள் யாவையும் வெளிப்படுத்திக் காத்து இறுதிக்காலத்தில் தனக்குள் ஒடுக்கிக் கொள்பவன்' அவனே!, (VI . 2 ) என்று பரம்போருளாகத் தொழப்படும் நிலையைப் பெறுகிறான். இப்படி ருத்ரனும் சிவனும் ஒன்று பட்டுச்சிவனாக முகிழ்ந்தவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவசமயம் உருப்பெற்றது.
இந்தச் சைவ சமயம் தத்துவ அடிப்படையில் பல வகையினதாகப் பிரிந்துள்ளது. அவற்றுள் மிகவும் புகழ் வாய்ந்தவையாக இருப்பவை வடக்கில் வாழும் (இந்தியாவின் வடபகுதியில்) காஷ்மீர சைவம். கன்னடத்தில் வழங்கும் (கர்நாடகா மாநிலத்தில்) வீர சைவம் எனும் லிங்காயதம், தமிழகத்தில் திகழும் சைவ சித்தாந்தம் ஆகியவையாகும்.
இனி நாம் காஷ்மீர சைவம், வீர சைவம், சைவ சித்தாந்தம் ஆகிய மூன்றையும் தனித்தனியாக விரிவாகப் பார்ப்போம்.
காஷ்மீர சைவம் அடுத்த தொடரில் பார்ப்போம்.