2 . காஷ்மீர சைவம்
காஷ்மீரத்தைச் சேர்ந்த தத்துவ தரிசிகளால் தொற்றுவிக்கப்பட்டுப் பெரும்பாலும் அப்பகுதியிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும் சைவத்திற்குக் காஷ்மீர சைவம் என்று பெயர். இதற்குத் திரிக, ஸபந்தபிரத்யபிஜ்ஞா என்றும் பல பெயர்கள் உண்டு. பதி - பசு - பாசம் என்னும் மூன்று பொருள்களும் ஒன்றாய்க் கொண்டு விளங்கும் தத்துவம் 'திரிக' எனப்படுகிறது. சிவம் - சக்தி - அணு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இருப்பதாலும் இப்பெயர் பெறுகிறது என்று சொல்வர். முழுமையான ஒன்று என்பதிநின்றும் உலகின் பன்மை நிலைக்கு மாறும் கொள்கையைக் கொண்டிருப்பதை 'ஸ்பந்த' என்பது குறிப்பிடுகிறது. பிரத்யபிஜ்ஞா என்பது முற்றொருமை; அதாவது ஆன்மா தன்னைச் சிவத்துடன் ஒருமைப்படுத்திக் கொள்ளும் வழியினை அடையாளங் கண்டு தெளிந்திடும் நிலையைச் சுட்டுகிறது என்கின்றனர்.
இரு பிரிவுகள்
காஷ்மீர சைவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று ஸ்பந்த சாஸ்திரத்தையும், மற்றொன்று பிரத்யபிஜ்ஞா சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளன. ஸ்பந்த சாஸ்திரத்திற்கு அடிப்படையாகக் கொண்டு உள்ளன. ஸ்பந்த சாஸ்திரத்திற்கு மூலவர்கள் வசுகுப்தரும் அவரது சீடர் கல்லதரும் என்கிறது சான்றுகள். இதன் ஆதார நூல்கள் 1 . சிவசூதிரம் அல்லது சிவசூதிராமணி, 2 .ஐம்பத்தொரு செயுல்களைகொண்ட ஸ்பந்தகாரிகை ஆகியன ஆகும். முதலாவது நூலைச் சிவனே வசுதேவருக்கு வெளிப்படுத்தினர் என்பது மரபு. சித்தர் அல்லது மானிட உருக்கொண்டு வந்து இதை வெளிப்படுத்தியதாகக் கூறுவார். இச்சூத்திரங்கள் மகாதேவமலை என்னும் இடத்தில் சிவனே வசுகுப்தரை அங்கு அழைத்துச் சென்று காட்டிக் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு. கடவுள் கனவில் வந்து சொன்னதாகவும் கூறுவதுண்டு.
இரண்டாவது நூலைப்பற்றியும் இப்படிப்பட்ட மரபுவழிச் செய்திகள் உள்ளன. ஒன்று வசுகுப்தர் செய்தார் என்றும், இன்னொன்று கல்லதர் இயற்றினார் என்றும், பிறிதொன்று இந்தக் கொள்கைகளை வசுகுப்தரிடமிருந்து பெற்ற கல்லதர் தம் மாணவர்களுக்குக் கற்றுத் தந்திடவே சாரிகை ஆக்கித்தந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கல்லதர் அவன்திவர்மனின் ஆட்சிக்காலத்திலும் (கி பி 854 ). வசுகுப்தர் அவருக்கு முந்தியும் இருந்தவர்களாவர்.
ப்ரத்ய பிஜ்ஞா நெறியைத் தோற்றுவித்தவர் சோமனந்தர். இவர் இயற்றிய நூல் சிவதிருஷ்டி. ஆயினும் இந்நெறியின் தலைமை சான்ற சாத்திரத்தை உதயகரர் என்பவர் சூத்திர வடிவில் செய்யுள்களாக இயற்றியுள்ளார். இச்சூதிரங்களுக்கு விரிவுரைகளும் வியாக்கியானங்களும் செய்தவர் அபினவகுப்தர். இவர் இயற்றிய நூல் பரமார்ந்த சாரம் எனப்படும். இவர் கி பி 993 -1015 ஆண்டுகளுக்கு இடையில் நூல் செய்தார் என்பர்.
முடிந்த உண்மைப் பொருள்
காஷ்மீர் சைவத்தின்படி சிவன் அல்லது சம்புதான் முடிந்த உண்மைப் பொருள். அசையும் பொருள், அசையாப்பொருள் ஆகிய அனைத்துப் பொருள்களின் ஆன்மாவைத் திகழ்பவரும் அவரே. அவர் எங்கும் கலந்த தன்மையராயும் (விஸ்வமய), எதையும் கடந்த நிலையினராயும் (விஷ்வோத்திர்ண) விளங்குகிறார். அவர் தூய உணர்வினர் (சைதன்ய ). முழுமையாய் அனுபவிக்கத்தக்கவர் (பரமேஸ்வர்), அவரிடம் இருந்துதான் இந்த உலகம் தோன்றுகிறது.
காட்சிப் பொருளாயினும் சரி, பிரதிபளிப்பாயினும் சரி, எவ்வாறு சாறு, பாகு, வெள்ளம், சர்க்கரை, கற்கண்டு என்று எல்லாம் கரும்புச் சாற்றிலிருந்து ஒவ்வொன்றாய்த் தோன்றுகின்ற்னவோ அவ்வாறே வெவ்வேறு நிலைகளில் தோன்றுபவர் தலைமை நிலைக்கு ஏற்ப ஆன்மாவைத் திகழும் சம்பு என்னும் ஒருவரே என்பார் அபினவகுப்தர், கண்ணாடியில் தெரியும் காட்சிகளைக் கண்ணாடியினின்ரும் பிரிக்க முடியாது. ஆனால், அக்காட்சிகள் ஒன்ரினின்றும் ஒன்று வேறுபட்டவை. அதுபோல பரம்பொருளான பைரவரின் தூய முழுமைக் காட்சியிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வேற்றுமையின்றித் தோன்றினும் ஒவ்வொரு பகுதியும் வேறுவேறு, காட்சியும் வேறு வேறுதான்.
உலகப்படைப்பு
இந்தப் பேருலகம் அவரது ஆற்றலால் வெளிப்படுவது இவ்வாற்றல் சக்தி எனப்படும். இது ஐந்து வகைப்படுகிறது. 1 சித் சக்தி = தன்னொளி அல்லது தெளிவு ஆற்றல்; 2 ஆனந்த சக்தி = ஆனந்தமயமான சுதந்தர ஆற்றல்; 3 இச்சா சக்தி = விருப்பு அல்லது வேட்கை ஆற்றல்; 4 ஞான சக்தி = அறிவு ஆற்றல்; 5 கிரியா சக்தி = செய்கை அல்லது வினை ஆற்றல். தம் சொந்த விருப்பின் மூலம் (ஸ்வேச்சயா) இச்சக்திகளால் சிவன் வெளிப்படுகிறார். இவற்றைத் தாங்கியும் நிற்கிறார். (ஸ்வபித்தாவ்). அவர் சுதந்தரறாய், தமது விருப்பின் ஆற்றலினால் இருக்கும் பொருள்கள் யாவற்றையும் தோற்றுவிக்கிறார். இவ்வுலகையும் படைக்கிறார். அவர் தம்மிளிருந்து இந்த உலகைதொன்றச் செய்கிறார். அது உண்மையில் அவரினின்றும் வேறுபட்டது இல்லை. கண்ணாடியில் தோன்றும் வீடுகளும் நகரங்களும் இப்படி கண்ணாடியைப்பாதிப்பதில்லையோ அப்படித்தான் இந்த உலகத் தோற்றமும் அவரைப் பாதிப்பதில்லை. இதிலிருந்து இந்த உலகை உருவாகுவதற்குக் கடவுளுக்கு 'தர்மம்' எனப்படும் தூண்டும் (மூல காரணமோ, 'பிரதான' எனப்படும் முதற் (உபாதான) காரணமோ தேவை இல்லை என்பது நமக்கு விழங்குகிறது. ஆகவே கடவுளே முதற் காரணமாய் இருந்து உலகைத் தோற்றுவிக்கிறார் என்னும் வேதாந்த சூத்திரக் கொள்கையும், சங்கரரது மாயை என்னும் திரிபுகாட்சி தத்துவமும் காஷ்மீர சைவத்துக்கு உடன்பாடில்லாமல் உள்ளது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது ஆன்ம விடுதலை.